குறைந்த மாணவர்களை கொண்ட அரச பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 4 மாதங்களில் திட்டமொன்றை தயாரிக்குமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்தது.ஒப்பீட்டளவில் குறைந்தளவு மாணவர்களை கொண்ட அரச பாடசாலைகளின் செயல்திறனை ஆய்வு செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.இந்த பாடசாலைகளில் காணப்படும் நீர் பிரச்சினைகள் உள்ளிட்ட கழிவறை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குழுவில் வெளிப்பட்டது. பாடசாலைகள் தொடர்பில் முறையான ஒருங்கிணைப்பு இன்மை காரணமாக வள ஏற்றத்தாழ்வு இருப்பதாக குழு தெரிவித்தது.மாணவர்கள் தொகை 200 ஐ விட குறைந்த 5,161 பாடசாலைகள் இந்நாட்டில் உள்ளதாகவும், அவ்வாறான பல்வேறு பாடசாலைகளின் தரம் தொடர்பில் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அது தொடர்பில் கண்டறியவேண்டும் எனவும், அதற்கான வளவாளர்களை தொண்டர் அடிப்படையில் இணைத்துக்கொள்ளுமாறும் குழு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவுக்கு அறிவித்தது.பாடசாலைக் கட்டமைப்பு ஆலோசனைக் கோவை, கல்வி நிருவாக நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் காலத்துக்கேற்ற வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கக் கணக்குக் குழு கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கும் போது பாடசாலைகள் தொடர்பில் பெற்றோரின் மனப்பாங்கு மாற்றமடையும் வகையில் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் குழு சுட்டிக்காட்டியது.பாடசாலைகளை திறத்தல், மூடுதல் மற்றும் ஒழுங்குபடுத்தல் என்பன பாடசாலை கட்டமைப்பு ஆலோசனைக் கோவைக்கு அமைய இடம்பெறவேண்டும் என குழு தெரிவித்தது. பிரபலமடையாத பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இடமாற்றம் செய்யும் போது அந்த இடமாற்ற கட்டளைகளை மேற்பார்வை செய்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.2013 ஆம் ஆண்டு முதல் 2017 வரையான காலத்தில் 93 பாடசாலைகளில் மாணவர்கள் இல்லாமை, நாட்டின் நிலைமை மற்றும் வேறு காரணங்களால் மூடப்பட்டிருந்ததாக அரசாங்க கணக்குக் குழுவில் புலப்பட்டது. 2018 இல் மாத்திரம் மூடப்பட்ட பாடசாலைகளில் எண்ணிக்கை 101 ஆகும்.ஒப்பீட்டளவில் குறைந்தளவு மாணவர்களை கொண்ட அரச பாடசாலைகளில் மாணவர்களின் விருப்பத்துக்கு அமைய இரண்டாம் நிலை தொகுதிப் பாடங்களை தெரிவு செய்ய சந்தர்ப்பம் இல்லாமை காரணமாக மாணவர்கள் அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளதாக குழுவில் கலந்துரையாடப்பட்டது. அவ்வாறான பாடங்களை கற்பிப்பதற்கு பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லாமை இதற்கு பிரதான காரணமாக உள்ளது. ஆரம்ப பிரிவுகளுக்கும் ஆசிரியர்கள் இல்லாமையும் ஒப்பீட்டளவில் குறைந்தளவு மாணவர்களை கொண்ட அரச பாடசாலைகள் எதிர்நோக்கும் மற்றுமொரு பிரச்சினை என குழுவில் தெரிவிக்கப்பட்டது.கடந்த அரசாங்கத்தின் போது செயல்படுத்தப்பட்ட ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ செயற்திட்டத்திற்கு 64,930 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததுடன் (2016-2020 காலம்) 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 31,234.77 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டிருந்தாகவும், அந்த திட்டத்தின் கீழ் சில சந்தர்ப்பங்களில், தேவைகளை சரியான முறையில் இனங்காணாமல் பாடசலைகளுக்கு வள ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குழுவில் கலந்துரையாடப்பட்டது.இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, வைத்திய கலாநிதி உப்புல் கலப்பத்தி, திஸ்ஸ அத்தநாயக்க, பேராசிரியர் ஹரிணி அமரசூரிய மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here