தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் New;று அதிகாலை 1.45 அளவில் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படை மற்றும் அதன் சீருடை என்பன தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சீருடை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காவல்துறை பிரிவுக்கு வழங்கப்பட்ட சீருடைக்கு இணையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
2011ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாக கருதப்படுகின்றது.
எனவே, அதனை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுதல், அல்லது சீருடை உள்ளிட்டவற்றை பயன்படுத்துதல் குற்றச் செயலாக கருதப்படும்.
இதற்கமைய யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.